Friday, July 7, 2017

வியாச மகரிஷியின் பிறந்தநாள் -குரு பூர்ணிமா

வியாச மகரிஷியின் பிறந்தநாள்


ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி ஆஷாட பௌர்ணமி எனப்படும். தமிழில் ஆனி பௌர்ணமி. சக்தி உபாசகர்களுக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கும் பௌர்ணமி தினம் ஒரு விசேஷ தினம். அன்று நவாவரண பூஜை, லலிதா சகஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ரம், முத்து சுவாமி தீட்சிதரின்  கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் என்று பாடி மகிழ்வர். கன்யகா பூஜை, சுவாசினி பூஜை செய்து மகிழ்வர்.

அன்றைய தினம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வியாச மகரிஷியின் பிறந்தநாள் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அதனால் எல்லா மடங்களிலும், குரு நிலையங்களிலும் வியாசர் முதலான முந்தைய குருமார்களை நினைத்து வணங்குவார்கள். சீடர்கள், பக்தர்கள் தங்கள் குருவைப் பணிந்து குருவிடம் மந்திர உபதேசம் பெற்று மகிழ்வர். அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களையே ரகசியமாக காதில் உபதேசிப்பர். இத்தகைய மந்திரங்களை மனதுக்குள் ஜெபிக்க வேண்டும். மற்றவர்கள் காதில் அது விழக்கூடாது. வாய்கூட அசைக்கக் கூடாது. மனதில்- இதயத்தில் ஆழ்ந்து துதிக்க வேண்டும்.

மந்திரம் என்பதற்கு யாது பொருள்? "மனனாத் த்ராயதே இதி மந்த்ர:' மனதில் தியானிப்பவரைக் காப்பாற்றுவதே மந்திரம். உபதேசம் செய்பவர் குரு; உபதேசம் பெறுபவர் சீடன் அல்லது பக்தன். ஆக, சீடனுக்கு குருவின்மீதும், பெற்ற மந்திரத்தின்மீதும் நம்பிக்கை - பக்தி தேவை. அது இல்லாவிட்டால் ஜெபிக்கும் மந்திரத்துக்கு பலமோ, பலனோ இருக்காது.

"ராம' என்று கூற இயலாத வேடனுக்கு "மரா மரா' என்று கூறும்படி சொல்ல, அவனும் ஜெபிக்க, அவனே வால்மீகி மகரிஷியானான்; ராமாயணம்  எழுதினான்.

மகாபாரத யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகிய பார்த்த சாரதி பகவத் கீதையை உபதேசித்தார். அதன் சாராம்சம் என்ன?

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுக'

"யாவற்றையும் துறந்து என்னையே சரணம் அடை. நான் உனது எல்லா பாபதாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்' என்கிறான் கண்ணன்.

பாரத யுத்தத்துக்கு கண்ணனின் உதவியைக் கேட்க  அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகைக்கு சென்றனர். அப்போது கண்ணன், ""ஒரு ஆயுதமும் எடுக்காத நான் தேவையா அல்லது எனது சேனைகள் தேவையா?'' என்று கேட்டான். துரியோதனன் சேனைகளைக் கேட்டான். அர்ஜுனனோ, ""நிராயுத பாணியான கண்ணன் போதும்'' என்றான். கடைசியில் வென்றது யார்? பஞ்ச பாண்டவர்கள் தானே. ஆகவேதான் ஆதிசங்கரர் கிருஷ்ணாஷ்டகத்தில் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்று ஜகத் குருவாகப் போற்றினார்.


குரு தீட்சையில் பலவிதம் உண்டு.

மௌன தீட்சை

ஆதிகுருவான தட்சிணாமூர்த்தி மௌன குருவாவார். அவர் வாய் திறந்து உபதேசம் செய்யார். சின் முத்திரை தாங்கி மௌனத்திலேயே உபதேசம் செய்வார். அவரைவிட வயதான சனகாதி முனிவர்கள் ஞானம் பெற்றனர். சின்முத்திரையின் தத்துவம் என்ன? ஆள்காட்டி விரல் கட்டை விரலைத் தொடும். மற்ற மூன்று விரல்களும் தூக்கி நிற்கும். முக்குணங்கள், மும்மலங்கள் நீங்கி ஜீவன் (ஆள்காட்டி விரல்) பரமனை (கட்டை விரல்) நாட முக்தி சித்திக்கும். திருச்சி மகாராஜாவின் மந்திரியான தாயுமானவருக்கும் மதுரை மந்திரியான திருவாதவூர் மாணிக்கவாசகருக்கும் நமசிவாய என்னும் பஞ்சாட்சர உபதேசம் மௌனத்திலேயே அல்லவா கிடைத்தது!

பலருக்கும் அவர்களது குருமார்கள் கனவில் தரிசனம் தந்து மந்திர உபதேசம் செய்துள்ளனர். பின்பு உருவில் கண்டு நிர்ணயம் செய்து ஜெபிக்கின்றனர்.

நயன தீட்சை
மீன் முட்டையிடும். பின் அதனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கும். இந்தப் பார்வை காரணமாக முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளி வரும். அதனையே நயன தீட்சை என்பர்.

பால் ப்ரண்டன் என்கிற வெளிநாட்டுக்காரர் இந்தியாவுக்கு வந்து பல ஆன்மிக, யோக குருக்களைக் கண்டார். எனினும் அவர் தேடி வந்த மனசாந்தி கிட்டவில்லை. ஒருவரது ஆலோசனைப்படி காஞ்சிப் பெரியவரைக் கண்டு பேசினார். அவரையே குருவாக வேண்டினார். அவரோ அருணாசலத்தில் ரமண மகரிஷியை தரிசிக்கும்படி கூறினார். அவர் நாடு திரும்ப பயணச்சீட்டு எடுத்தாகிவிட்டது. எனவே திருவண்ணாமலை செல்ல அவகாசமில்லாததால், விடிந்ததும் தன் நாடு செல்ல முடிவெடுத்தார். அன் றிரவு அவர் ஹோட்டலில் உறங்கிக் கொண்டிருந்தார். நடு இரவு, கனவா- நனவா என்று அவருக்குப் புரியவில்லை. காஞ்சிப் பெரியவர் தோன்றி,

"அருணாசல ரமண மகரிஷியை தரிசிக்காது நாடு திரும்பாதே' என்றார். இதனால் அடைந்த வியப்பால், மறுநாள் ஒரு நபருடன் திருவண்ணாமலைக்குச் சென்ற பால் பிரண்டன், தனது மனதில் இருந்த மூட்டை சந்தேகங்களுடன் ரமண மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அவர்முன் அமர்ந்தார். இருவர் கண்களும் சந்தித்தன. கண்கூசி அவர் கண்ணை மூடினார். சில மணி நேரங்கள் அப்படியே கண்மூடியிருந்தார். கண் திறந்தபோது அவரது கேள்விகள் அனைத்துக்கும் பதில் பிறந்தது; ஒளி பிறந்தது.

சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பெற்ற ஆன்மிக வெளிச்சத்தை, "Search in Secret India'  என்ற புத்தகமாக வெளியிட்டார். அதன்மூலம் உலக ஆன்மிக மக்கள் ரமண மகரிஷியைப் பற்றி அறிந்தனர். பலர் அவரை நாடி வந்து ஆன்மிக ஒளி பெற்றனர்.

ஸ்மரண தீட்சை

ஆமையானது கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும். பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம். இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம்.

குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே, குருவின் நினைப்பிலேயே (Telepathy என்பர்) சீடனுக்கு குருவருள் கிடைத்துவிடும். இது சுலபமல்ல.

ஆனால் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், ஷிர்டி சாயிபாபா, காஞ்சி மகாபெரியவர் போன்ற மகான்களின் பக்தர்களுக்கு நேர்ந்த அனுபவங் களைப் பார்த்தால், இது சாத்தியமென்று தெரிகிறது.

ஸ்பரிச தீட்சை

கோழி முட்டையிடும். பின் அதன்மீதமர்ந்து அடைகாத்திட முட்டை பொரித்து குஞ்சாகும்.

காசியில் கபீர்தாசர், ராமானந்தர் என்ற இரு பெரியவர்கள் இருந்தனர். ராமானந்தர் இந்து அல்லாத பிற மதத்தவருக்கு ராமநாம தீட்சை தரமாட்டார். கபீர், இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டதால் முகம்மதியராகக் கருதப் பட்டார். அவர் ராம், ரஹீம் இருவரும் ஒன்றே என்ற தத்துவம் கொண்டிருந்தார். ராமானந் தரிடம் நாம தீட்சைபெற விழைந்தார்.


இது எவ்வாறு சாத்தியமாகும்? எனவே கபீர் ஒரு யுக்தி செய்தார். விடியற்காலை ராமானந்தர் காசி கங்கைக்கு ஸ்நானம் செய்யப் போகும் வழியில் இருட்டில் படுத்துக் கொண்டார் கபீர். வழக்கம்போல் ராமானந்தர் வரும்போது தெரியாமல் கபீர்மீது கால்வைக்க, ""ஆஹா! ராம் ராம்'' என்றார். கபீர் விரைந்தெழுந்து அடிபணிந்து, ""தங்கள் திருவடி ஸ்பரிசத்தையும் ராமநாம தீட்சையையும் பெற்றேன். என்னே எனது பாக்கியம்'' என்றார். ராமானந்தரும் நெகிழ்ந்தார்.


ஸ்ரீராமகிருஷ்ணர்- விவேகானந்தர் இணக்கத்தையும் சிறிது சிந்திப்போம். நரேன் (விவேகானந்தர்), ""நீர் கடவுளைக் கண்டீரா? எனக்கு காண்பிப்பீரா?'' என்று கேட்ட பல யோக குருக்களில், ""கண்டுள்ளேன்; அந்த ஆர்வம், வேட்கை இருந்தால் உனக்கும் காண்பிப்பேன்'' என்றவர் ராமகிருஷ்ணர். ஒருநாள் நரேன் ராமகிருஷ்ணரைக் காணவந்த போது, அவரின் மார்பில் ராமகிருஷ்ணர் தனது காலை வைத்தார். ""என்னை என்ன செய்துவிட்டீர்கள்?'' என்று கேட்டபடியே விவேகானந்தர் தன்னை மறந்த நிலைக்கு ஆளானார். பின் பரமஹம்சர் நரேனின் மார்பில் தடவ, அவர் சுயநினைவுக்கு வந்தார். அந்த அனுபவத்தை- சுகத்தை சொல்லால் விவரிக்க முடியுமா என்ன?

ஆகவேதான் அருணகிரியார் தமது கந்தரனுபூதியில் "பேசா அனுபூதி' என்பார்.

அந்த அனுபவம், ஆனந்தம் விவரிக்க இயலாதது. அதனை உணரத்தான் முடியும். சர்க்கரையின் இனிப்பை விவரிக்க முடியுமா?

Bliss, Experience cannot be explained. It has to be felt.

அந்த அருணகிரிநாதரின் ஜெயந்தியும் ஆனி பௌர்ணமிதான்.

உமைக்கு சிவன் கூறிய- ஸ்காந்த புராணத்தில் உள்ள குருகீதாவின் இரு குரு துதிகளைக் காண்போமா!


"மந்த்ர ராஜம் இதம் தேவி குரு இதி அக்ஷரத்வயம்
ஸ்ம்ருதி வேதாந்த வாக்யேன குரு: ஸாக்ஷாத் பரமம்பதம்.'


குரு என்ற சொல் மந்திரங்களில் உன்னதமானது. வேதாந்த வாக்கியங்கள் குருவை பரப்பிரம்மம் என்கின்றன.  பரமபதத்தை அளிக்கவல்லது.

"காமிதஸ்ய காமதேனு: கல்யாண கல்பயாதப:
சிந்தாமணி: சிந்திதஸ்ய ஸர்வ மங்கள காரகம்.'

காமதேனு, கல்பதரு, சிந்தாமணி போன்று வேண்டும் யாவற்றையும் தந்தருளி மங்களம் செய்பவன் குரு.


அருணகிரியாரின் குருகுஹ அனுபூதியை (கடைசி) அனுபவிப்போமா.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே!'


திருமூலரின் ஒரு குரு மந்திரத்துடன் இதனை நிறைவு செய்வோம்.

"தெளிவு குருவின் திருமேனி காணல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவுரை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!'

--
நல்லா இருந்தது பதிவிட்டேன் நன்றி.
 Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms