வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, February 23, 2017

பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் பன்னிரு சிவாலயங்கள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் 12 சிவ ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.


திருமலை
சிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டு இவரை 'முஞ்சிறை திருமலைத்தேவர்' என்று அழைக்கிறது.

திக்குறிச்சி
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் இல்லை. மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.

திற்பரப்பு
முக்கண்ணனை தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர் என்றும் வீர பத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய ஆலயத்தில் நந்திதேவர் வடக்கு நோக்கித் திரும்பி அமைந்துள்ளார்.

திருநந்திக்கரை
திருநந்திக்கரை நான்காவதாக வரும் ஆலயம். மூலவர், நந்திகேஸ்வரர். மார்த்தாண்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொன்மனை
குலசேகரத்திலிருந்து சுருளக்கோடு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்மனை பரமன் ஆலயம். தீம்பிலேஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர், தீங்குகளை விரட்ட வல்லவர். முகப்பு மண்டபத்தில், நந்தி படுத்த நிலையில் காணப்படுவது வித்தியாசமானது.

பன்னிப்பாக்கம்
சிவாலய ஓட்டத்தில் ஆறாவது சிவத்தலம் பன்னிப்பாக்கம். கிராத மூர்த்தியாக விளங்கும் இறைவன், தீராத வினைகளைத் தீர்த்து நற்கதி வழங்குகிறார். பைரவருக்கு இந்தக் கோயிலில் தனி சந்நதி அமைந்துள்ளது.

கல்குளம்
ஏழாவதாக தரிசிக்கப்படும் இந்த ஆலயம் தனிச்சிறப்பு கொண்டது. ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் இங்கு மட்டும்தான் இறைவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இறைவன் நீலகண்ட சுவாமியாகவும், அம்பிகை ஆனந்த வல்லியாகவும் காட்சி தருகிறாள்.

மேலாங்கோடு
எட்டாவதாக உள்ள ஆலயம் இது பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி தருகிறார்.

திருவிடைக்கோடு
சிவாலய ஓட்டத்தில் ஒன்பதாவது ஆலயம் திருவிடைக்கோடு. இடைக்காடர் எனும் சித்தரின் பெயரால் இத்தலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூலவர், மகாதேவர் என்று வணங்கப்படுகிறார்.

திருவிதாங்கோடு
பத்தாவது தரிசனத் தலம், திருவிதாங்கோடு. பரிதிபாணி என்றழைக்கப்படுகிறார் இந்தக் கோயில் ஈசன். இதன் தென் பகுதியில் கேரள பாணியில் அமைந்த ஆலயத்தில், மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்.

திருப்பன்றிக்கோடு
திருப்பன்றிக்கோடு பக்தவத்சலர் ஆலயம், பதினோராவது திருத்தலமாக விளங்குகிறது. விஷ்ணு தலம்போல பெயர் அமைந்திருந்தாலும் பக்தர்கள் இத் தல இறைவனை, திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றே அழைக்கின்றனர்.

திருநட்டாலம்
சிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தலம்.


மேலும் சிவாலய ஓட்டம் (கதை) பற்றி படிக்க :

2016 மகாசிவராத்திரி பற்றி படிக்க : http://arrowsankar.blogspot.in/2016/03/2016.html

2017 மகாசிவராத்திரி பற்றி படிக்க : http://arrowsankar.blogspot.in/2017/02/2017.html

 print this in PDF Print Friendly and PDF

Tuesday, February 21, 2017

மஹாசிவராத்திரி 2017

மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு.

நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே நம் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ஷிவாஎன்றால் எது இல்லையோ, அது’. உங்களில் நான்என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நாம் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.

இதை நோக்கியே மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.

வெறும் கண்விழித்திருக்கும் ஒரு நாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நாம் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ஷிவாஎனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நாம் எல்லோரும் உணர்வோம்!

சிவராத்திரியில் சொல்லவேண்டிய சுலோகம்
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம்
கயா ப்ரயாகேத் வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்.
-பில்வாஷ்டகம்

பொருள்:
மூன்று இதழ்களைக் கொண்டது வில்வ இலை. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிக்கும். இறைவனின் மூன்று கண்களையும் நினைவுபடுத்துகின்றன. பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று பருவங்களை அளிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். பரமேஸ்வரா, இந்த வில்வத்தை நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன். காசி என்ற புனிதத்தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரைத் தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ, அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன். உமக்கு நமஸ்காரம்.
(மகாசிவராத்திரியன்று இத்துதியை ஜெபித்துக் கொண்டே வில்வ தளங்களால் சிவபெருமானுக்குப் பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும்.)

நன்றி : ஈஷா யோகா மையம்
 Print Friendly and PDF

Tuesday, February 7, 2017

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.2017

காளி தேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்த மகாராஜா, ‘நாடாறு மாதம்.. காடாறு மாதம்..என்ற கோட்பாட்டின்படி நாட்டை ஆண்டதாக புராண வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. உஜ்ஜையினி பட்டணத்தை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த விக்கிரமாதித்தன், தனது புத்தி கூர்மையாலும், விவேகத்துடன் கூடிய வீரத்தாலும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து வெற்றி அடைந்தார் என்பதனை வேதாளம் கதை உள்பட பல்வேறு கதைகளின் மூலம் நாம் அறிய முடியும். 

இத்தகைய பெருமைக்குரிய விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல புராண வரலாறு. காடாறு மாதம் ஆண்ட கால கட்டத்தில் விக்கிரமாதித்தனால் உருவாக்கி வழிபாடு செய்யப்பட்ட கோவில் தான், திருச்சி மாவட்டம் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில். இதுவே சமயபுரம் மாரியம்மனின் மூல கோவில் ஆகும். காலப்போக்கில் எடுத்து கட்டப்பட்டதே தற்போதுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் என்பது வரலாற்றுப் பதிவுகள். இப்போது நாம் வழிபட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோவில் 17–ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், ஒரு போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது இந்த ஆலயம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த படியாக, அதிக உண்டியல் வருமானம் வருகிற ஆலயமாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள்பாலித்து வரும் அம்பாளின் அழகு தெய்வீகமானது. எட்டு கரங்களுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து, சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமய புரத்து அம்மனின் அழகைக் கண்டு தரிசித்தால் மன அமைதி உண்டாகும். மேலும் மனம் ஒருமுகப்பட்டு மனம் தூய்மை பெறும்.

எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, மகமாயி என்ற இன்னொரு பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற அசுரன், ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்தான். அதன் பலனாக அவனுக்கு சிவபெருமான் பல வரங்களை அளித்தார். அதனால் ஏற்பட்ட ஆணவத்தால் மகிஷாசூரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவனது துன்பத்தை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும், அன்னை ஆதிபராசக்தியிடம் போய் முறையிட்டனர். அம்பாளும் அவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அஷ்டபுஜத்துடன் துர்க்கை சொரூபமாக சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சூரனை வதம் செய்தாள். அன்னை, அசுரனை வதம் செய்த திருநாளைத்தான் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

மகிஷாசூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் அன்னையானவள் தவம் செய்ய எண்ணினாள். அதன்படி சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரை (கொள்ளிடம்) பகுதிக்கு வந்தாள். அங்குள்ள வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு, சிவந்த மேனியாளக மஞ்சள் ஆடை தரிசித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்தபடி உண்ணா நோன்பிருந்தாள். இவ்வாறு பல ஆண்டு காலம் செய்த தவத்தின் பயனாக அன்னை சாந்த சொரூபிணியாக, சர்வ ரட்சகியாக மாறி மாரியம்மன் என்ற பெயர் பெற்றாள். இதுவே சமயபுரம் மாரியம்மனின் வரலாறு.








இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான், சமய புரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்தியம் படைக்க மாட்டார்கள். இளநீர், பானகம், நீர் மோர், கரும்புச் சாறு உள்ளிட்ட பானங்களே அன்னையின் ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் எனப் பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. தேர்த் திருவிழாவின்போது லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி, முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை செலுத்துதல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். தைப்பூசத்தின்போது அம்பாள் வடகாவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வதுடன், தனது அண்ணன் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாகும்.

கிராமப்புற தோற்றத்தில் இருந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் அரசு ஒதுக்கிய பல கோடி நிதி மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தன. கோவிலின் அனைத்து பிரகாரங்கள் எல்லாம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக நவீன வசதிகளுடன் மண்டபங்கள், கட்டணம் செலுத்தி தங்குவதற்கான விடுதி அறைகள் கட்டப்பட்டு உள்ளன. முடி காணிக்கை மண்டபம் குளியல் அறை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

கிழக்குவாசல் ஏழு நிலை ராஜகோபுரம் தவிர மற்ற 3 கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அம்பாள் கர்ப்பக்கிரகத்தில் சுதை வேலைப்பாடுகள் அதன் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவு பெற்று பிப்ரவரி 6–ந்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. ஆயிரம் கண்ணுடையாள், சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பெருமைகளுக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் மூலமாக அம்மன் அருள் பெறுவோம்.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், அம்பாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் தெளிக்கப்பட்டால் அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பதும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. வெளிமாநில பக்தர்கள் மட்டும் இன்றி, வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளும் அம்பாளின் அருள்பெற இந்தக் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms