வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, July 21, 2017

ஆடிமாதமும் தமிழரும்

மழை தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் சிலிர்க்கின்றன. சோம்பிக் கிடக்கும் ஆறுகள் புத்துணர்ச்சி கொள்கின்றன. புது வெள்ளம் பாய்கிறது. எங்கும் உற்சாகம் பொங்குகிறது. ஆடி பிறந்துவிட்டது.விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.


தைப்பொங்கல். தீபாவளி போன்ற சமய வழிபாட்டுப் பண்டிகையிலிருந்து ஆடிப் பெருக்கு மாறுபட்டது. இப்பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வந்தனம் செய்வார்கள். புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.

ஆடி மாதம் இன்றைய தமிழ் மாதக் கணக்கின்படி நான்காம் மாதம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. அதன்படி ஆடி மாதம், முதல் அரையாண்டுக் காலம் முடிந்து அடுத்த அரையாண்டுக் காலத்தின் தொடக்கம். ஆண்டின் தொடக்கமான தைத் திருநாளைப் பொங்கலிட்டு வரவேற்பதுபோல அடுத்த அரையாண்டின் தொடக்கமான ஆடியும் கொண்டாடப்பட்டதுண்டு.

ஆடியில் வழிபாடு
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.

காவிடி டெல்டாவில் ஆடி பிறந்ததும் ஆரம்பாகிற விஷயங்களில் கோவில் திருவிழாக்களும் ஒன்று. பெரும்பாலும் எல்லா ஊர்களிலுமே ஒரு மாரியம்மன் கோவில் கண்டிப்பாக இருக்கும். மாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடத்தி பத்தாம் நாள் தீமிதி உற்சவம், அல்லது செடல் உற்சவம் விமரிசையாக நடந்தேறும். கொடியேறி திருவிழா முடியும்வரை ஊரில் இறைச்சிப் புழக்கம் இருக்காது. ஐந்து வயதுக் குழந்தை முதல் எண்பது வயதுப் பெரியவர் வரை எல்லா வயதினரும் தீ மிதிப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கும். சீர்காழி அருகேயுள்ள மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கடைவெள்ளியன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். அவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்குவார்கள். மாரியம்மன் தவிர காளியம்மன், அங்காளம்மன், என்று எல்லா அம்மன் கோவில்களிலும் தவறாமல் திருவிழா நடைபெறும்.

ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாவை ஒட்டிக் கூழ் ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் ஆடி பஞ்ச காலமாக இருந்தது. அப்பஞ்சத்தை எதிர்கொள்ள ஊர்கூடி கூழ் ஊற்றிப் பகிர்ந்துண்டிருப்பார்கள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆடிக்கு முந்தைய சில மாதங்களில் மழையே இருக்காது என்பதால் அப்போது வறட்சி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்தச் சமயத்தில் ஊருக்குக் கூழ் ஊற்றும் பழக்கம் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இன்று இது வெறும் சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூடத் தமிழர்களால் கூழ் ஊற்றும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் கொடைத் திருவிழா கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. அம்மாதம் காற்றுக் காலம் என்பதால் அக்காலத்தில் மக்கள் பயணத்தைத் தவிர்த்தார்கள். அதனால் அவர்கள் உள்ளூரிலேயே தங்க நேர்ந்ததால் அக்காலத்தை உள்ளூர்க் கோயில் திருவிழா நடத்துவதற்காகச் செலவிட்டார்கள். அப்படித்தான் ஆடி மாதம் திருவிழா நடத்துவது வழக்கமானது என்கிறது ஒரு சான்று.

கடந்த சில வருடங்களாகவே காவிரியில் தண்ணீர் வராமல் போய்விட்டது. ஆனாலும் மக்கள் பண்டிகையைக் கொண்டாடாமல் விட்டுவிடவில்லை. ஆற்றுக்குள் ஊற்று தோண்டி அதில் தண்ணீர் எடுத்துப் படையலை போட்டுவருகிறார்கள். கிருஷ்ணராயபுரம், முசிறி, குணசீலம், திருப்பாராய்த்துறை, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், திரூவளர்ச்சோலை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என்று எல்லா ஊர்களிலும் ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மக்கள் கூடி காவிரித்தாயை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள். கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் இருக்கும் காவிரி துலாகட்டத்தில் ஆற்றுக்குள் அடிபைப் அடித்து அதில் நீர் பிடித்து காவிரித்தாயை வணங்கினார்கள்.
இந்தப் பதினெட்டு நாளுக்கும் மகாபாரப் போர் நடந்த பதினெட்டு நாளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போர் முடிந்து பாவங்களைத் தீர்க்க ஆற்று நீரில் மூழ்கி எழுவதாகவும் ஐதீகம் உண்டு. ஆடி போர்க்களமான மாதம் என்பதால்தான் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் தரித்திரம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தெய்வ காரியங்களுக்கான மாதம் என்பதால் ஆடியில் திருமணச் சடங்குகள் தவிர்க்கப்படுகின்றன. அதுபோல புதுமணத் தம்பதியர் தாம்பத்தியத்தில் ஈடுபதுவதும் தவிர்க்கப்படுகிறது.

தமிழர்கள் புரட்டாசி, மார்கழியிலும் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் மற்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. திருமாங்கல்யம் பெருக்குதல் என்னும் சடங்கு இம்மாதத்தில்தான் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது தாலி பிரித்துக் கட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலிக் கயிற்றைக் களைந்து புதிய தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளும் சடங்காகும்.

ஆண்டின் மற்ற நாட்களில் பேரிக்காய் என்று ஒன்று இருப்பதையே நினைவில் கொள்ளாத மக்கள் ஆடிப்பெருக்கு தினத்துக்கு மட்டும் எங்கிருந்தாலும் தேடிச்சென்று பேரிக்காயை வாங்கி வந்துவிடுவார்கள். பேரிக்காய் இல்லாமல் படையலே நடக்காது. அன்றோடு பேரிக்காய் கண்ணிலிருந்து காணாமல் போய்விடும். பேரிக்காய் அளவுக்கு முக்கியத்துவம் அவல்பொரிக்கும் உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ஊறவைத்த அரிசியை எடுத்துக்கொண்டுபோய் அதை வறுத்து அவலாக கொடுக்கும் கடைகளில் நிற்கும். காலையில் போனால் மாலையில்தான் வறுத்தெடுக்க முடியும். அவ்வளவு கூட்டம் அலைமோதும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு முன்னேறுவார்கள். தலைக்குமேல் வெய்யில் ஆளைக் கருக்கும். ஆனாலும் அசராமல் அவல் பொரித்து வெற்றிப் பெருமிதத்துடன் திரும்புவார்கள்.

ஆடிப் பெருக்கை ஒட்டி இன்னொரு சுவையான விஷயமும் உண்டு. இந்நாளில் காவிரி ஆறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவிக்கும் சடங்கும் வழக்கத்தில் உள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பிற்குச் செய்யும் புளியோதரை, மாங்காய்ச் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வெல்ல சாதம் இவை எல்லாவற்றையும் ஆற்றில் படையலிடுகிறார்கள்.

திருவிழாக்களுக்கு மத்தியில் ஆடித் தள்ளுபடி இம்மாதத்தில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்த வியாபாரக் கொண்டாட்டங்கள் தொடங்கிய காலகட்டத்தை அறிய முடியவில்லை. ஆடி மாதம் வியாபாரம் படுமந்தமாக நடக்கும் காலகட்டம். ஏனெனில் இம்மாதத்தில்தான் விவசாயத் தொழில்கள் தொடங்கும். மக்கள் உழவுத் தொழில்களுக்காக முதலீடு செய்வதால் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் திருமணச் சடங்கு எதுவும் மேற்கொள்ளப்படாததால் வியாபாரம் மந்தமாகவே இருக்கும். அதைச் சரிக்கட்டவே ஆடி மாதம் தள்ளுபடி தந்து விற்பனையைப் பெருக்க வியாபார நிறுவனங்கள் முனைந்தன. இதுதான் ஆடித் தள்ளுபடியின் பின்னணி.

ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அறுதி என ஆடியின் சிறப்பு நீண்டுகொண்டே போகிறது. இம்மாதம் கொண்டுவரும் முதல் மழையின் மண்வாசமும், வானம் பார்த்த பூமியும் பூத்துக் குலுங்கும் வண்ணமும், உழுத நிலத்தில் தூவிய விதைகள் முளைவிடும் காட்சியும் ஆடியை இன்னும் சிறப்பானதாக மாற்றுகின்றன.

இப்படி ஈரமும் பசுமையும் தெய்வீக மணமும் கமழும் ஆடியைக் கொண்டாட ஆடி மாதம் ஒன்று போதாது.

குறிப்பு : எங்கோ படித்தது பிடித்தது பதிவிட்டேன்.

  Print Friendly and PDF

Friday, July 7, 2017

வியாச மகரிஷியின் பிறந்தநாள் -குரு பூர்ணிமா

வியாச மகரிஷியின் பிறந்தநாள்


ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி ஆஷாட பௌர்ணமி எனப்படும். தமிழில் ஆனி பௌர்ணமி. சக்தி உபாசகர்களுக்கும் ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கும் பௌர்ணமி தினம் ஒரு விசேஷ தினம். அன்று நவாவரண பூஜை, லலிதா சகஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ரம், முத்து சுவாமி தீட்சிதரின்  கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் என்று பாடி மகிழ்வர். கன்யகா பூஜை, சுவாசினி பூஜை செய்து மகிழ்வர்.

அன்றைய தினம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வியாச மகரிஷியின் பிறந்தநாள் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. அதனால் எல்லா மடங்களிலும், குரு நிலையங்களிலும் வியாசர் முதலான முந்தைய குருமார்களை நினைத்து வணங்குவார்கள். சீடர்கள், பக்தர்கள் தங்கள் குருவைப் பணிந்து குருவிடம் மந்திர உபதேசம் பெற்று மகிழ்வர். அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களையே ரகசியமாக காதில் உபதேசிப்பர். இத்தகைய மந்திரங்களை மனதுக்குள் ஜெபிக்க வேண்டும். மற்றவர்கள் காதில் அது விழக்கூடாது. வாய்கூட அசைக்கக் கூடாது. மனதில்- இதயத்தில் ஆழ்ந்து துதிக்க வேண்டும்.

மந்திரம் என்பதற்கு யாது பொருள்? "மனனாத் த்ராயதே இதி மந்த்ர:' மனதில் தியானிப்பவரைக் காப்பாற்றுவதே மந்திரம். உபதேசம் செய்பவர் குரு; உபதேசம் பெறுபவர் சீடன் அல்லது பக்தன். ஆக, சீடனுக்கு குருவின்மீதும், பெற்ற மந்திரத்தின்மீதும் நம்பிக்கை - பக்தி தேவை. அது இல்லாவிட்டால் ஜெபிக்கும் மந்திரத்துக்கு பலமோ, பலனோ இருக்காது.

"ராம' என்று கூற இயலாத வேடனுக்கு "மரா மரா' என்று கூறும்படி சொல்ல, அவனும் ஜெபிக்க, அவனே வால்மீகி மகரிஷியானான்; ராமாயணம்  எழுதினான்.

மகாபாரத யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகிய பார்த்த சாரதி பகவத் கீதையை உபதேசித்தார். அதன் சாராம்சம் என்ன?

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுக'

"யாவற்றையும் துறந்து என்னையே சரணம் அடை. நான் உனது எல்லா பாபதாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்' என்கிறான் கண்ணன்.

பாரத யுத்தத்துக்கு கண்ணனின் உதவியைக் கேட்க  அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகைக்கு சென்றனர். அப்போது கண்ணன், ""ஒரு ஆயுதமும் எடுக்காத நான் தேவையா அல்லது எனது சேனைகள் தேவையா?'' என்று கேட்டான். துரியோதனன் சேனைகளைக் கேட்டான். அர்ஜுனனோ, ""நிராயுத பாணியான கண்ணன் போதும்'' என்றான். கடைசியில் வென்றது யார்? பஞ்ச பாண்டவர்கள் தானே. ஆகவேதான் ஆதிசங்கரர் கிருஷ்ணாஷ்டகத்தில் "க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்று ஜகத் குருவாகப் போற்றினார்.


குரு தீட்சையில் பலவிதம் உண்டு.

மௌன தீட்சை

ஆதிகுருவான தட்சிணாமூர்த்தி மௌன குருவாவார். அவர் வாய் திறந்து உபதேசம் செய்யார். சின் முத்திரை தாங்கி மௌனத்திலேயே உபதேசம் செய்வார். அவரைவிட வயதான சனகாதி முனிவர்கள் ஞானம் பெற்றனர். சின்முத்திரையின் தத்துவம் என்ன? ஆள்காட்டி விரல் கட்டை விரலைத் தொடும். மற்ற மூன்று விரல்களும் தூக்கி நிற்கும். முக்குணங்கள், மும்மலங்கள் நீங்கி ஜீவன் (ஆள்காட்டி விரல்) பரமனை (கட்டை விரல்) நாட முக்தி சித்திக்கும். திருச்சி மகாராஜாவின் மந்திரியான தாயுமானவருக்கும் மதுரை மந்திரியான திருவாதவூர் மாணிக்கவாசகருக்கும் நமசிவாய என்னும் பஞ்சாட்சர உபதேசம் மௌனத்திலேயே அல்லவா கிடைத்தது!

பலருக்கும் அவர்களது குருமார்கள் கனவில் தரிசனம் தந்து மந்திர உபதேசம் செய்துள்ளனர். பின்பு உருவில் கண்டு நிர்ணயம் செய்து ஜெபிக்கின்றனர்.

நயன தீட்சை
மீன் முட்டையிடும். பின் அதனை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே இருக்கும். இந்தப் பார்வை காரணமாக முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளி வரும். அதனையே நயன தீட்சை என்பர்.

பால் ப்ரண்டன் என்கிற வெளிநாட்டுக்காரர் இந்தியாவுக்கு வந்து பல ஆன்மிக, யோக குருக்களைக் கண்டார். எனினும் அவர் தேடி வந்த மனசாந்தி கிட்டவில்லை. ஒருவரது ஆலோசனைப்படி காஞ்சிப் பெரியவரைக் கண்டு பேசினார். அவரையே குருவாக வேண்டினார். அவரோ அருணாசலத்தில் ரமண மகரிஷியை தரிசிக்கும்படி கூறினார். அவர் நாடு திரும்ப பயணச்சீட்டு எடுத்தாகிவிட்டது. எனவே திருவண்ணாமலை செல்ல அவகாசமில்லாததால், விடிந்ததும் தன் நாடு செல்ல முடிவெடுத்தார். அன் றிரவு அவர் ஹோட்டலில் உறங்கிக் கொண்டிருந்தார். நடு இரவு, கனவா- நனவா என்று அவருக்குப் புரியவில்லை. காஞ்சிப் பெரியவர் தோன்றி,

"அருணாசல ரமண மகரிஷியை தரிசிக்காது நாடு திரும்பாதே' என்றார். இதனால் அடைந்த வியப்பால், மறுநாள் ஒரு நபருடன் திருவண்ணாமலைக்குச் சென்ற பால் பிரண்டன், தனது மனதில் இருந்த மூட்டை சந்தேகங்களுடன் ரமண மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அவர்முன் அமர்ந்தார். இருவர் கண்களும் சந்தித்தன. கண்கூசி அவர் கண்ணை மூடினார். சில மணி நேரங்கள் அப்படியே கண்மூடியிருந்தார். கண் திறந்தபோது அவரது கேள்விகள் அனைத்துக்கும் பதில் பிறந்தது; ஒளி பிறந்தது.

சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பெற்ற ஆன்மிக வெளிச்சத்தை, "Search in Secret India'  என்ற புத்தகமாக வெளியிட்டார். அதன்மூலம் உலக ஆன்மிக மக்கள் ரமண மகரிஷியைப் பற்றி அறிந்தனர். பலர் அவரை நாடி வந்து ஆன்மிக ஒளி பெற்றனர்.

ஸ்மரண தீட்சை

ஆமையானது கரையைத் தேடிவந்து முட்டை இட்டுச் செல்லும். பின் அது அந்த முட்டையைப் பற்றிய நினைவிலேயே இருக்குமாம். இதன் காரணமாக முட்டை பொரிந்து குஞ்சாகுமாம்.

குருவுக்கும் சீடனுக்கும் ஆழ்ந்த அன்பு- நம்பிக்கை இருந்தால் சீடனின் நினைப்பிலேயே, குருவின் நினைப்பிலேயே (Telepathy என்பர்) சீடனுக்கு குருவருள் கிடைத்துவிடும். இது சுலபமல்ல.

ஆனால் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், ஷிர்டி சாயிபாபா, காஞ்சி மகாபெரியவர் போன்ற மகான்களின் பக்தர்களுக்கு நேர்ந்த அனுபவங் களைப் பார்த்தால், இது சாத்தியமென்று தெரிகிறது.

ஸ்பரிச தீட்சை

கோழி முட்டையிடும். பின் அதன்மீதமர்ந்து அடைகாத்திட முட்டை பொரித்து குஞ்சாகும்.

காசியில் கபீர்தாசர், ராமானந்தர் என்ற இரு பெரியவர்கள் இருந்தனர். ராமானந்தர் இந்து அல்லாத பிற மதத்தவருக்கு ராமநாம தீட்சை தரமாட்டார். கபீர், இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டதால் முகம்மதியராகக் கருதப் பட்டார். அவர் ராம், ரஹீம் இருவரும் ஒன்றே என்ற தத்துவம் கொண்டிருந்தார். ராமானந் தரிடம் நாம தீட்சைபெற விழைந்தார்.


இது எவ்வாறு சாத்தியமாகும்? எனவே கபீர் ஒரு யுக்தி செய்தார். விடியற்காலை ராமானந்தர் காசி கங்கைக்கு ஸ்நானம் செய்யப் போகும் வழியில் இருட்டில் படுத்துக் கொண்டார் கபீர். வழக்கம்போல் ராமானந்தர் வரும்போது தெரியாமல் கபீர்மீது கால்வைக்க, ""ஆஹா! ராம் ராம்'' என்றார். கபீர் விரைந்தெழுந்து அடிபணிந்து, ""தங்கள் திருவடி ஸ்பரிசத்தையும் ராமநாம தீட்சையையும் பெற்றேன். என்னே எனது பாக்கியம்'' என்றார். ராமானந்தரும் நெகிழ்ந்தார்.


ஸ்ரீராமகிருஷ்ணர்- விவேகானந்தர் இணக்கத்தையும் சிறிது சிந்திப்போம். நரேன் (விவேகானந்தர்), ""நீர் கடவுளைக் கண்டீரா? எனக்கு காண்பிப்பீரா?'' என்று கேட்ட பல யோக குருக்களில், ""கண்டுள்ளேன்; அந்த ஆர்வம், வேட்கை இருந்தால் உனக்கும் காண்பிப்பேன்'' என்றவர் ராமகிருஷ்ணர். ஒருநாள் நரேன் ராமகிருஷ்ணரைக் காணவந்த போது, அவரின் மார்பில் ராமகிருஷ்ணர் தனது காலை வைத்தார். ""என்னை என்ன செய்துவிட்டீர்கள்?'' என்று கேட்டபடியே விவேகானந்தர் தன்னை மறந்த நிலைக்கு ஆளானார். பின் பரமஹம்சர் நரேனின் மார்பில் தடவ, அவர் சுயநினைவுக்கு வந்தார். அந்த அனுபவத்தை- சுகத்தை சொல்லால் விவரிக்க முடியுமா என்ன?

ஆகவேதான் அருணகிரியார் தமது கந்தரனுபூதியில் "பேசா அனுபூதி' என்பார்.

அந்த அனுபவம், ஆனந்தம் விவரிக்க இயலாதது. அதனை உணரத்தான் முடியும். சர்க்கரையின் இனிப்பை விவரிக்க முடியுமா?

Bliss, Experience cannot be explained. It has to be felt.

அந்த அருணகிரிநாதரின் ஜெயந்தியும் ஆனி பௌர்ணமிதான்.

உமைக்கு சிவன் கூறிய- ஸ்காந்த புராணத்தில் உள்ள குருகீதாவின் இரு குரு துதிகளைக் காண்போமா!


"மந்த்ர ராஜம் இதம் தேவி குரு இதி அக்ஷரத்வயம்
ஸ்ம்ருதி வேதாந்த வாக்யேன குரு: ஸாக்ஷாத் பரமம்பதம்.'


குரு என்ற சொல் மந்திரங்களில் உன்னதமானது. வேதாந்த வாக்கியங்கள் குருவை பரப்பிரம்மம் என்கின்றன.  பரமபதத்தை அளிக்கவல்லது.

"காமிதஸ்ய காமதேனு: கல்யாண கல்பயாதப:
சிந்தாமணி: சிந்திதஸ்ய ஸர்வ மங்கள காரகம்.'

காமதேனு, கல்பதரு, சிந்தாமணி போன்று வேண்டும் யாவற்றையும் தந்தருளி மங்களம் செய்பவன் குரு.


அருணகிரியாரின் குருகுஹ அனுபூதியை (கடைசி) அனுபவிப்போமா.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே!'


திருமூலரின் ஒரு குரு மந்திரத்துடன் இதனை நிறைவு செய்வோம்.

"தெளிவு குருவின் திருமேனி காணல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவுரை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!'

--
நல்லா இருந்தது பதிவிட்டேன் நன்றி.
 Print Friendly and PDF

மனித வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள்

மனித வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம் 5. ப்ரணகால தோஷம் எனப்படும்.

1.
வஞ்சித தோஷம் : பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

2.
பந்த தோஷம் : நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

3.
கல்பித தோஷம் : பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

4.
வந்தூலக தோஷம் : ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

5.
ப்ரணகால தோஷம் : திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.

 Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms